சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

இரண்டாம் ஆயிரம்   திருமங்கை ஆழ்வார்  
திரு நெடுந்தாண்டகம் - திரு நெடுந்தாண்டகம்  

Songs from 2052.0 to 2081.0   ( )
திரு நெடுந்தாண்டகம் (2052.0)    
Pages:    1    2  Next
மின் உரு ஆய் முன் உருவில் வேதம் நான்கு ஆய்
      விளக்கு ஒளி ஆய் முளைத்து எழுந்த திங்கள்-தான் ஆய்
பின் உரு ஆய் முன் உருவில் பிணி மூப்பு இல்லாப்
      பிறப்பிலி ஆய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உரு ஆய் மணி உருவில் பூதம் ஐந்து ஆய்
      புனல் உரு ஆய் அனல் உருவில் திகழும் சோதி
தன் உரு ஆய் என் உருவில் நின்ற எந்தை
      தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே



[2052.0]
Go to Top
பார்-உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி
      பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
      இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செந்தீ
      ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற
மூவுருவும் கண்ட போது ஒன்றாம் சோதி
      முகில் உருவம் எம் அடிகள் உருவம்-தானே



[2053.0]
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும்
      திரேதைக்கண் வளை உருவாய்த் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம்
      பெருமானைக் கரு நீல வண்ணன்-தன்னை
      ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது
      ஊழிதோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செங் கண்ண வண்ணன்-தன்னை-
      கட்டுரையே-யார் ஒருவர் காண்கிற்பாரே?



[2054.0]
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன்-தன்னை
      இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்து ஆய்
செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி
      திசை நான்கும் ஆய் திங்கள் ஞாயிறு ஆகி
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா
      அந்தணனை அந்தணர்மாட்டு அந்தி வைத்த
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும்
      வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே   



[2055.0]
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப
      ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து
எண் மதியும் கடந்து அண்டம்மீது போகி
      இரு விசும்பினூடு போய் எழுந்து மேலைத்
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி
      தாரகையின் புறந் தடவி அப்பால் மிக்கு
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
      மலர் புரையும் திருவடியே வணங்கினேனே  



[2056.0]
Go to Top
அலம்புரிந்த நெடுந் தடக்கை அமரர்-வேந்தன்
      அம் சிறைப் புள் தனிப் பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லாத் தன்மையாளன்
      தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழிப் பெண்ணை ஈர்த்த
      நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலிப்
      பூங் கோவலூர் தொழுதும்-போது நெஞ்சே



[2057.0]
வற்பு உடைய வரை நெடுந் தோள் மன்னர் மாள
      வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு
வெற்பு உடைய நெடுங் கடலுள் தனி வேல் உய்த்த
      வேள் முதலா வென்றான் ஊர்-விந்தம் மேய
கற்பு உடைய மடக் கன்னி காவல் பூண்ட
      கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி
      பொற்பு உடைய மலை-அரையன் பணிய நின்ற
      பூங் கோவலூர்-தொழுதும்-போது நெஞ்சே



[2058.0]
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
      நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
      உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா
      காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்
      பெருமான் உன் திருவடியே பேணினேனே



[2059.0]
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர்
      மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய்
கொங்குத் தார் வளங் கொன்றை அலங்கல் மார்வன்
      குலவரையன் மடப் பாவை இடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
      பனி வரையின் உச்சியாய் பவள வண்ணா
எங்கு உற்றாய்? எம் பெருமான் உன்னை நாடி
      ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே



[2060.0]
Go to Top
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட
      புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான்
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால்
      என் அறிவன்-ஏழையேன்? உலகம் ஏத்தும்
தென் ஆனாய் வட ஆனாய் குடபால் ஆனாய்
      குணபால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி
      திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே



[2061.0]
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்
      பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
      மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல்
      மட மானை இது செய்தார்-தம்மை மெய்யே
கட்டுவிச்சி சொல் என்னச் சொன்னாள் நங்காய்!-
      கடல் வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே?



[2062.0]
நெஞ்சு உருகிக் கண் பனிப்ப நிற்கும் சோரும்
      நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள்
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும்
      வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புட்கொடியே ஆடும் பாடும்
      அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
      என் சிறகின்கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன்
      இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே



[2063.0]
கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
      காமரு பூங் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும்
      வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும்
      மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்துத் தன் கிளியைச் சொல்லே என்று
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே   



[2064.0]
Go to Top
முளைக் கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா
      மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
      அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில்
      வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று
      மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே



[2065.0]
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
      களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லியம் பூ மலர்ப் பொய்கைப் பழன வேலி
      அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி
      தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே
      மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே



[2066.0]
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
      கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமரக் கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும்
      வட திருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும்
      விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும்
      துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே



[2067.0]
பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப
      பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்
      சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்
      தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன
      நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே



[2068.0]
Go to Top
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்
      கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்
      பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்
      எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்
      இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே



[2069.0]
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன்
      மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள்
      அணி அரங்கம் ஆடுதுமோ? தோழீ என்னும்
பெற்றேன் வாய்ச் சொல் இறையும் பேசக் கேளாள்
      பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
      பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள்
      பொரு அற்றாள் என் மகள்-உம் பொன்னும் அஃதே?



[2070.0]
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள
      தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள
      பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் பார் இடந்து பாரை உண்டு
      பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட
பேர் ஆளன் பேர் ஓதும் பெண்ணை மண்மேல்
      பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?



[2071.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

divya prabandham chapter